Recent posts

வெக்கை (Vekkai) - பூமணி (Poomani)

நூல் வகை - நாவல் (Novel)
ஆசிரியர் - பூமணி (Poomani)

தன் அண்ணனைக் கொன்ற வடக்கூரான் என்னும் செல்வாக்கு மிகுந்த மனிதனைக் கொன்று பழிதீர்த்த சிதம்பரம் என்னும் கரிசல்காட்டு எளிய விவசாய குடும்பத்தை சேர்ந்த 15 வயது சிறுவனை பற்றிய கதை 'வெக்கை'. வடக்கூரானை கொன்ற பிறகு தன் தந்தையுடன் எட்டு நாட்கள் குழந்தைப் பருவத்தின் விளையாட்டுகளோடு காடுகளில் தலைமறைவாக அலைந்து திரியும் சிதம்பரத்தின் நினைவுகளின் ஊடாக கரிசல் காட்டு வாழ்வின் முரண்களைப் பற்றியும் பழியின் அரசியலைப் பற்றியும் ஆராய்கிறார் பூமணி. சிதம்பரம் அவனோடு தலைமறைவாக அலைந்து திரியும் அவனுடைய தந்தை ஆகிய இருவரைத் தவிர வடக்கூரானால் கொல்லப்பட்ட சிதம்பரத்தின் அண்ணன், வடக்கூரான், மாமா, அத்தை, தாய், தங்கை, ஜின்னிங் பேக்டரி முதலாளி என சொற்பமான சில பாத்திரங்களைக் கொண்டு பெரும்பாலும் உரையாடல்களால் நகர்ந்து செல்லும் இந்த நாவல் தன் வாழ்வாதாரங்களையும் கௌரவத்தையும் காப்பாற்றிக்கொள்ள முற்படும் எளிய மனிதர்களின் மூர்க்கமான போராட்டத்தை குறியீடாகக் கொண்டு வர்க்கப் போராட்டத்தின் அரசியல் அறம் ஆகியவை குறித்து
விவாதிக்கிறது. சட்டம், காவல்துறை, நீதிமன்றங்கள் ஆகிய அரசின் முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள், சார்புகள் குறித்து மேற்குறிப்பிட்ட எளிய மனிதர்களின் பார்வையில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் இந்த நாவலை திட்டவட்டமான அரசியல் நாவலாக கருத வைக்கின்றன. அரசியல் நாவல்களின் அடிப்படைகளான சார்புத் தன்மையையும் பிரச்சாரத் தன்மையையும் வாசிப்பு அனுபவத்திற்கு பெரும் தடை. ஆனால் பூமணியின் நாவல் கலையின் நுட்பங்களை தக்க வைத்துக் கொள்வதிலும், சார்புகளுக்கப்பால் வாழ்வின் உண்மையை கண்டறிவதிலும் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. சிதம்பரம் என்னும் சிறுவனின் பழிதீர்க்கும் ஆவேசத்தையும், குழந்தைமையின் குதூகலமான உலகையும் எதிரெதிராக நிறுத்தி பூமணி எழுப்பும் கேள்விகள் வலுவான அரசியல் விவாதங்களை உள்ளடக்கிய இந்த நாவலை ஒரு கலைப்படைப்பாக ஆக்குவதற்கு உன்னை புரிந்திருக்கின்றன.

-தேவிபாரதி.


புத்தகத்தை படிக்க கீழே சொடுக்குங்கள்...
வெக்கை

புத்தகத்தை பதிவிறக்க கீழே சொடுக்கவும்...
வெக்கை




No comments